தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பலா (பலவு)

83. குறிஞ்சி
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை-
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே!
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன்

90. குறிஞ்சி
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி,
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்

373. குறிஞ்சி
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:21:03(இந்திய நேரம்)