தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


நண்டு

117. நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார்

303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன்

316. நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி-தோழி!-விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி
ஓங்கு வரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன்

328. நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர்

351. நெய்தல்
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன்

401. நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கு விளையாடலும் கடிந்தன்று,
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே!
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:22:49(இந்திய நேரம்)