தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பசு (ஆ, ஆன், கறவை, செருத்தல்)

27. பாலை
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார்

64. முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே.
பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை

80. மருதம்
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி,
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவது உடையளாயின், வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல,
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார்

104. பாலை
அம்ம வாழி, தோழி! காதலர்,
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; 'சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார்.

108. முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன்

132. குறிஞ்சி
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே,
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார்

162. முல்லை
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை-
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே?
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன்.

190. முல்லை
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன்.

204. குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம்-பெரும்தோளோயே!
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன்

210. முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.
பிரிந்து வந்த தலைமகன், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார்.

224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.
பிரிவிடை 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன்

260. பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார்.

275. முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி

295. நெய்தல்
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி

344. முல்லை
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன்

358. மருதம்
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்:
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:23:09(இந்திய நேரம்)