தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


புலி

47. குறிஞ்சி
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே!
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண்ணிலவினா

88. குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே-தோழி!-நாமே.
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன்

141. குறிஞ்சி
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க என்றோளே, அன்னை' என, நீ
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இருள் நடு நாள் வருதி;
சாரல் நாட, வாரலோ' எனவே.
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ

209. பாலை
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே,
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

215. பாலை
படரும் பைபயப் பெயரும்; சுடரும்
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர்
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல்
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

237. பாலை
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ,
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே;
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே?
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை

253.பாலை
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின்,
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல்
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ-
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன்

321. குறிஞ்சி
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்-
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே.
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.

343. பாலை
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை-
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயருமாறே.
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:23:28(இந்திய நேரம்)