தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பூனை (வெருகு)

107. மருதம்
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார்.

139. மருதம்
மனை உறை கோழி குறுங் கால் பேடை,
வேலி வெருகினம் மாலை உற்றென,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே.
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார்.

220. முல்லை
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி

240. முல்லை
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:23:34(இந்திய நேரம்)