தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


யானை (களிறு, பிடி, வேழம், நெடுங்கைவன்மான்)

1. குறிஞ்சி
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார்

13. குறிஞ்சி
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர்

34. மருதம்
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்,
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!-
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே.
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன்

36. குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர்

37. பாலை
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

52. குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்,
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை!
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே?
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார்

54. குறிஞ்சி
யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார்

75. மருதம்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்!-
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?
தலைமகன் வரவுணர்த்திய பாணர்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார்

76. குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண் வரல் வாடை தூக்கும்
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார்

77. பாலை
அம்ம வாழி, தோழி!-யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தட மென் தோளே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

79. பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லாது ஏகல் வல்லுவோரே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன்

88. குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே-தோழி!-நாமே.
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன்

91. மருதம்
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே!
ஓவாது ஈயும் மாரி வண் கை,
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே!
பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிர

100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

111. குறிஞ்சி
மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்,
'வென்றி நெடு வேள்' என்னும்; அன்னையும்,
அது என உணரும்ஆயின், ஆயிடைக்
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக-தோழி!-நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே!
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. - தீன்மதிநாகன்.

112. குறிஞ்சி
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே-
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார்

119. குறிஞ்சி
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார்

129. குறிஞ்சி
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை;
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன்

136. குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

141. குறிஞ்சி
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க என்றோளே, அன்னை' என, நீ
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இருள் நடு நாள் வருதி;
சாரல் நாட, வாரலோ' எனவே.
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ

142. குறிஞ்சி
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்

161. குறிஞ்சி
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர்

169. மருதம்
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே:
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி,
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார்.

170. குறிஞ்சி
பலரும் கூறுக, அஃது அறியாதோரே-
அருவி தந்த நாட் குரல் எருவை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே,
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கருவூர் கிழார்

180. பாலை
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல்
அவ் வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார்

198. குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர்

208. குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே,
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்

215. பாலை
படரும் பைபயப் பெயரும்; சுடரும்
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர்
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல்
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

232. பாலை
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும்,
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?-
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை,
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல், துஞ்சும்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை

244. குறிஞ்சி
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!-
ஓரி முருங்கப் பீலி சாய
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம்
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே.
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டுஎதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அ

246. நெய்தல்
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு,
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே;
அலையாத் தாயரொடு நற்பாலோரே.
சிறைப்புறம். - கபிலர்

247. குறிஞ்சி
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்;
திறவோர் செய்வினை அறவது ஆகும்;
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை
வீயா மென் சினை வீ உக, யானை
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.
கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். - சேந்தம்பூதன்.

255. பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!-
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.
'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன்

258. மருதம்
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே;
அலராகின்றால்-பெரும!-காவிரிப்
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை,
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்,
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே.
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர்

260. பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார்.

262. பாலை
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

279. முல்லை
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

284. குறிஞ்சி
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?-
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன்

292.குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர்

307. பாலை
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது,
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன்

308. குறிஞ்சி
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்
மா மலைநாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன்

319. முல்லை
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார்ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது.- தாயங் கண்ணன்

329. பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி,
தெள் நீர் நிகர்மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார்

331. பாலை
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப்
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன்

332. குறிஞ்சி
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள்,
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர்
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை
குன்றகச் சிறுகுடி இழிதரும்
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே?
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.- மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்

333. குறிஞ்சி
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன்
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக் குறை வருத்தம் வீட,
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே?
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன்

343. பாலை
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை-
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயருமாறே.
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன்

346. குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன்-தோழி!-
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,
காலை வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன்

348. பாலை
தாமே செல்பஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே?
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன்

357. குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல என்னும் சொல்லை மன்னிய-
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர்

393. மருதம்
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே,
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை,
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர்

394. குறிஞ்சி
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
முன் நாள் இனியது ஆகி, பின் நாள்
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:23:57(இந்திய நேரம்)