தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


அன்றில்

57. நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

160. குறிஞ்சி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே?
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன்.

177. நெய்தல்
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப்
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன்

301. குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:24:03(இந்திய நேரம்)