தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


அன்னம்

205. நெய்தல்
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன்

300. குறிஞ்சி
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார்

304. நெய்தல்
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து
வெண் தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:24:10(இந்திய நேரம்)