தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


குருகு (நாரை)

5. நெய்தல்
அதுகொல், தோழி! காம நோயே?-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நரி வெரூஉத்தலையார்

25. குறிஞ்சி
யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்

34. மருதம்
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்,
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!-
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே.
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன்

103 நெய்தல்
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன்

113. மருதம்
ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே:
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.
பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.- மாதீர்த்தன்

114. நெய்தல்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே,
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன்

125.நெய்தல்
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி-தோழி!-சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே,
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன்.

127. மருதம்
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம்
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர!
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக,
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே.
பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார்

128. நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயள் அரியோட் படர்தி;
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர்

163.நெய்தல்
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன்

166. நெய்தல்
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை;
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

228. நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

236. நெய்தல்
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.
வரைவிடை வைத்துப் பிரிவான். 'இவள் வேறு படாமை ஆற்றுவி' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார்.

260. பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார்.

296. நெய்தல்
அம்ம வாழி-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே.
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன்

303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன்

325. நெய்தல்
'சேறும் சேறும்' என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, 'மருங்கு அற்று
மன்னிக் கழிக' என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங் கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார்

349. நெய்தல்
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி,
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்;
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின்,
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே?
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன்.

381. நெய்தல்
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,
பசலை ஆகி, விளிவதுகொல்லோ-
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி,
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:24:35(இந்திய நேரம்)