தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற்
என்பது கடவுள் வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
(பிரதி பேதம்) 4. ‘வெஞ்சுடர்’,
‘செஞ்சுடர்’ 6. ‘ஏமம் வைகல்’
(பதவுரை) தாமரை புரையும் காமர் சேவடி -தாமரை மலரைப்
போன்ற அழகிய செம்மையாகிய திருவடியையும், பவழத்து அன்ன மேனி -
பவழத்தை ஒத்தசிவந்த நிறத்தை யும், திகழ் ஒளி - விளங்கா நின்ற
ஒளியையும், குன்றி ஏய்க்கும் உடுக்கை - குன்றிமணியை ஒக்கும்
சிவந்த ஆடை யையும், குன்றின் நெஞ்சுபக எறிந்த அம் சுடர் நெடு
வேல் - கிரவுஞ்ச மலையினது நடுவிடம் பிளக்கும்படி வீசிய அழகிய
ஒளியை உடைய நெடிய வேற் படையையும், சேவல் அம் கொடியோன் -
கோழிச் சேவலை வரைந்த கொடியையு முடைய முருகக் கடவுள், காப்ப -
பாதுகாத்து அருளுவதால், உலகு ஏமம் வைகல் எய்தின்று -
உலகத்தில் உள்ள உயிர்கள் இன்ப மயமாகிய நாட்களை அடையா நின்றன;
ஆதலின் உலகிற்கு இடையூறு இல்லை என்றவாறு.
(முடிபு) அடியையும் மேனியையும் ஒளியையும் உடுக்கையையும்
வேலையும் சேவற் கொடியையும் உடைய முருகவேள் காப்ப உலகு ஏம
வைகலை எய்தியது.
(கருத்து)முருகக் கடவுளின் இத் திருவுருவைத் தியானம் பண்ணுக;
பண்ணின் எல்லா நலமும் எய்தலாம்.
(விசேட உரை)மங்கல மொழியாதலின் தாமரை முற்கூறப்பட்டது.
காமர்-காமம் மருவு என்பதன் விகாரம் எனக் கொண்டு விருப்பம்
மருவிய எனலுமாம்; “காமரு சுனைமலர்” (முருகு.75)
என்பதன் உரையையும் அதன் அடிக் குறிப்பையும் பார்க்க. மேனி:
ஆகுபெயர்; ‘மேனியென்றார் ஆகுபெயரால் நிறத்தை’ (சிலப். 5:
172, அடியார்.) குன்றென்றது சூரபன்மாவுக்கு அரணாகி அவனை
உள்ளிட்டுக் கொண்டு ஓடி வந்த மலையெனலும் ஆம்; “ஒரு தோகை
மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனூடுறப், பொருதோகை சுரராச
புரமேற விடுகாளை புகழ் பாடுவாம்” (தக்க.5) என்பதையும்,
‘தனக்குப் பகைவனான சூரபன்மாவிற்கு மறைவாய் ஓடி வரலான
மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரே காலத்திலே
ஊடுருவும்படி வேலேறுபடப் பொருதருளி’ என்னும் அதன் உரைப்
பகுதியையும், “கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியும், தொளைபட்
டுருவத் தொடுவே லவனே” (கந்தரனுபூதி) என்பதையும் பார்க்க.
நெஞ்சு- நடுவிடம். சேவல்-மயிற் சேவலுமாம்; ஆண் மயிலுக்குச்
சேவல் என்னும் பெயர் வழங்குதல் மரபன்றாயினும், முருக வேளுடைய
மயிலை அங்ஙனம் கூறுதல் பொருந்தும்; “சேவற் பெயர்க்கொடை
சிறகொடு சிவணும், மாயிருந் தூவி மயிலலங் கடையே” (தொல்.
மரபு.48) என்பதன் விசேட உரையிலுள்ள, ‘செவ்வேளூர்ந்த
மயிலுக்காயின் அதுவும் நேரப்படும்’ என்னும் பேராசிரியர்
கூற்றால் இது விளங்கும். முருக வேளுக்கு மயிற் கொடியும் உண்டு
என்பது, “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ” (முருகு. 122)
என்பதனாலும் அதன் அடிக் குறிப்பாலும் அறியப்படும். சேவலங்
கொடியோனென்பது முருகன் என்னும் துணையாய் நின்றது.
சேவலங்கொடியை உடம்படு புணர்த்தினார், “பழமுதிர் சோலை மலைகிழ
வோனே” (முருகு. 317) என்றாற்போல. ஏமவைகல் - பிறவித்
துன்பம் சாராத நாட்களெனினுமாம் (பரி. 17:53, பரிமேல்.) உலகு:
ஆகுபெயர். எய்தின்று: கால வழுவமைதி.
இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது.
இது வாழ்த்து முதலிய மூன்றனுள் வருபொருள் உரைத்தல் என்பதன்
பாற்படும்.
இச் செய்யுள் அகப் பொருட்டுறைச் செய்யுள் தொகையாகிய
இந்நூலுக்குப் புறத்துறுப்பாய்ப் புறப்பொருட் பாடாண்டிணையைச்
சார்ந்த கடவுள் வாழ்த்து என்னும் துறையின் பாற்படும்.
1 மேற்கோளாட்சி, அடி 1. ‘தாமரை ... சேவடியென்றவழி,
சிவப்புடையன பலவற்றினும் தாமரை உயர்ந்ததாகலின் அஃது உவமையாகக்
கூறப்பட்டது’ (தொல். உவம. 3., இளம்.); ‘தாமரை....
சேவடி என்பது சினைக்குச் சினை உவமமாயிற்று’ (தொல். உவம. 6,
இளம், பேர.்); ‘தாமரை ... சேவடி யென்றவழி நான்கு சொல்லாகி ஓசை
பெற்று நின்றவாறு கொள்க; அவை ஈரசை யென்று கொள்க’
(தொல். செய். 11, இளம்.); ‘தாமரை .. .. ..
சேவடியென்பது பதினோரெழுத்தான் வந்தது’(தொல். செய்.
49, இளம்.); ‘தாமரை என்பது தாமரைப் பூ என்றவாறு; இது
முதலில் கூறும் சினையறி கிளவி; தாமரை ... சேவடி யென்றாற் போல
வெனக் கொள்க’ (யா.வி.சிறப்.); ‘தாமரை ... சேவடி என
அதன் சினையை உணர்த்தின் ஆகுபெயராம்’(நன்.289; மயிலை; 290,
சங்.); ‘தாமரை ... சேவடி ... என்றாற் போல்வன முதற்பொருளை
உணர்த்தும் பொருட் பெயரான் அவற்றின் ஒரு வழி உறுப்பாகிய
சினைப் பொருளைக் கூறின’ (இ.வி.192.)
3.“குன்றி யேய்க்கு முடுக்கையென் றாற்கரி, தென்று மோசிவப்
பென்றுமோ வவ்விரண், டொன்றி நின்றவென் றோதுது மோவெனின், நின்ற
தோர்வர லாற்றொடு நிற்குமே” (யா.வி.95, உரை, மேற்.)
3-4. ‘குன்றின் ... வேலென்புழிப் போல நெஞ்சென்றது ஈண்டும்
2. அகப்பொருட்டாய் நின்றது’ (குறள், 1250,
பரிமேல்.); ‘குன்றின் ... வேலென்பது போலக் கல்லுக்கு
நெஞ்சு கூறினார் என உணர்க’ (தஞ்சை.331, சொக்க.);
‘குன்றின் ... வேலென்றாற்போல உரம் என்றது ஈண்டு
இடப்பொருட்டாய் நின்றது’ (திருமயிலையமக அந்தாதி, 11.)
5. ‘சொல்லுவான் குறிப்பு முருகவேளை நோக்குதலின் சேவல்
கோழியாயிற்று’ (தொல். கிளவி. 53, தெய்வச்.)
5-6. ‘ஈற்றடியிரண்டும் மகார வகாரங்கள் எதுகையாய் வந்தன
(யா.வி. 53.)
முற்றும்: ‘இதனுட் குறித்த பொருள்: முருகவேள் காப்ப உலகம்
காவற்பட்டது என்னும் பொருள். இதனை முடித்தற்பொருட்டு
3. எழுத்து முதலாகி வந்து ஈண்டிய அடிகள்
எல்லாவற்றானும் நாட்டியவாறு கண்டு கொள்க’ (தொல். செய்.
74, இளம்.); ‘என்பது ஆறடியான் வந்தது’ (தொல்.
செய். 158, பேர்.); ‘என்பது 4. முன்னமின்றி
வந்தது’ (தொல். செய். 211, பேர்,ந.); ‘இதனுட்
பொழிப்பெதுகையும் ஒரூஉ எதுகையும் ஒரூஉ மோனையும் பிறிதும்
வந்தனவாயினும் முதல் வந்ததனாலே பெயர் கொடுத்துப்
பொழிப்பெதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்’ (யா.வி.
53); ‘இஃது எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள்’
(யா.கா. ஒழிபு.9.)
ஒப்புமைப் பகுதி1. மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி” (நன்.
155, மயிலை. மேற்.)
2.பவழத்தன்ன மேனி: “செய்யன்” (முருகு. 206); “உருவு
முருவத்தீ யொத்தி” (பரி. 19:99.) திகழொளி: “ஓவற
விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி” (முருகு.3.)
3. “சிவந்த ஆடையன்” (முருகு. 206); “உடையு மொலியலுஞ்
செய்யை” (பரி. 19:97)
3-4. குன்றின் நெஞ்சு பக எறிந்தது: “குன்றங் கொன்ற குன்றாக்
கொற்றத்து” (முருகு. 266); “தெவ்வுக் குன்றத்துத்
திருந்துவே லழுத்தி, அவ்வரை யுடைத்தோய்”
(பரி.19:102-3); “வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேற்,
றிகழ்பூண் முருகன்” (தொல். களவு.23, ந.மேற்:
‘பையுண் மாலை’); “கடல் வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்,
கவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல், நெடுவேள்”
(சிலப்.23:189-90): “அருவரை பிளந்த வஞ்சுவரு நெடுவேல்”
(பெருங். 2.5:147). குன்றின் நெஞ்சு: “விஞ்சையம்
பெருமலை நெஞ்சகம் பிளந்து” (பெருங். 1.51:8.)
4. (பி-ம்.) செஞ்சுடர் நெடுவேல்: “செவ்வேற் சேஎய்”
(முருகு.61); “செவ்வா யெஃகம்” (பதிற். 11:7);
“அமையா வென்றி யரத்தநெடு வேலோய்” (கல்.கடவுள. 2:15).
5. சேவலங் கொடியோன்: “கோழி யோங்கிய வென்றடு விறற் கொடி”,
“புகரில் சேவலங், கொடியன்” (முருகு.38, 210-11.)
6. எய்தின்று: குறள்,1240.
இந்நூற் செய்யுட்களும் செய்யுள் பகுதிகளும் பழைய
உரைகளில் மேற்கோளாக எடுத்து ஆளப்பட்ட இடங்கள்.
எழுத்து, ஆசை, சீர், தொடை முதலியன ஈண்டிய
அடி.
முன்னம். தொல்: செய்.
207, பேர். பார்க்க.