'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது'
62
இந்திர விழவில் பூவின் அன்ன
புன் தலைப் பேடை வரி நிழல் அகவும்
இவ் ஊர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ் ஊர் நின்றன்று மகிழ்ந! நின் தேரே?
இதுவும் அது. 2
63
பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர!
எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. 3
64
அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
நலம் மிகு புதுப் புனல் ஆட, கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்;
பலரே தெய்ய; எம் மறையாதீமே.
தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது. 4