தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

81-90

81-90

81
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ
என்னை 'நயந்தனென்' என்றி; நின்
5
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே.
தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 1

82
வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள்
'மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறுந் தார்த்
தாது உண் பறவை வந்து, எம்
போது ஆர் கூந்தல் இருந்தன' எனவே.
மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்குமாற்றால் தலைமகள் சொல்லியது. 2

83
மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும் ஊர்
ஒண் தொடி முன் கை ஆயமும்
தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே.
வரைந்த அணுமைக்கண்ணே தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி, அதனை அறிந்த தலைவி அவனோடு புலந்து சொல்லியது. 3

84
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள்,
கண்ணின் காணின், என் ஆகுவள்கொல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண் கயம் போல,
5
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே?
பரத்தையர் மனைக்கண் தங்கிப் புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 4

85
வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை
தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறு இல் யாணர் மலி கேழ் ஊர! நீ
சிறுவரின் இனைய செய்தி;
5
நகாரோ பெரும! நிற் கண்டிசினோரே?
தலைமகன் பரத்தையர்மேல் காதல் கூர்ந்து நெடித்துச் செல்வுழி, மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது. 5

86
வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல்
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர!
எம் இவண் நல்குதல் அரிது;
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே.
'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை அதற்குப் புலந்து, தலைமகற்குச் சொல்லியது. 6

87
பகன்றைக் கண்ணி பல் ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும்; எம்மை மற்று எவனோ?
தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட காதல்பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தலைமகனோடு புலந்து சொல்லியது. 7

88
வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத்
தண் துறை ஊரனை, எவ்வை எம் வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல், யாம் அது வேண்டுதுமே.
தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பு இல்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது. 8

89
அம்ம வாழி, பாண! எவ்வைக்கு
எவன்? பெரிது அளிக்கும் என்ப பழனத்து
வண்டு தாது ஊதும் ஊரன்
பெண்டு என விரும்பின்று, அவள்தன் பண்பே.
'தலைமகன் தலைமகளைப் போற்றி ஒழுகாநின்றான்' என்பது கேட்ட காதல்பரத்தை அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 9

90
மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே.
தலைமகன் தன் மனைக்கண் சொல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகன் கேட்குமாற்றால் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:50:55(இந்திய நேரம்)