தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathipalar Kurippu



பதிப்பாளர் குறிப்பு
 
 
திங்கள் முடியணிந்த சித்தி விநாயகனே
வெங்கண் வினைதவிர்க்கும் வித்தகா - மங்களங்கள்
புல்வாக் கறியப் பொருள்சொல்லப் பாடிடவே
நல்வாக் கடியேற்கு நல்கு.
ஐயரவர்கள்

பதிற்றுப்பத்து என்பது புலவர் பதின்மர் சேரவரசர் பதின்மர் மீது
ஒவ்வொருவருக்குப் பத்துப் பாடல்களாகப் புறத்துறை அமைத்துப் பாடிய
ஒப்பற்ற ஒரு சிறந்த நூலாகும். முதற்பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லை.
முற்றும் கிடைத்தபிறகு பதிப்பிக்கலாம் என்று எண்ணி இருந்த ஐயரவர்கள்,
எங்குத் தேடியும் அந்தப் பகுதிகள் கிடைக்காமையால் கிடைத்தவற்றை மட்டும்
இராமபாணப் பூச்சிக்கு இரையாகமல் 1904-ஆம் ஆண்டு பதிப்பித்தார்கள்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களும், சேரநாட்டின் இயற்கையும்,
அந்நாட்டு மலைகள், ஆறுகள், ஊர்கள், பட்டினங்கள் முதலியவற்றையும்
இந்நூலின் மூலமாக அறிந்து கொள்ளலாம். சேர அரசர்களின் மறப்பண்பையும்,
கொடைத் திறத்தையும் ஒவ்வொரு பாட்டின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ஐயரவர்கள் பதிப்பித்துள்ள சங்க இலக்கியங்கள் தமிழ் அன்பர்களுக்குத்
தட்டுப்பாடின்றிக் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நூல்நிலையம்
தமிழ் உலகிற்குத் தொண்டாற்றி வருகின்றது.

பல தமிழ் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நூல்
எட்டாம் பதிப்பாக வெளிவருகின்றது.

பெசன்ட் நகர்,
சென்னை-90.
12.08.1994

வித்துவான் சு. பாலசாரநாதன்
ஆராய்ச்சித்துறை,

டாக்டர் உ.வே.சாமிநாதையர்
நூல்நிலையம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-06-2019 10:41:04(இந்திய நேரம்)