Primary tabs
-
பதிப்புரை
செந்தமிழ்நாட்டுக் கருவூலமாகத் திகழ்வன எட்டுத்தொகை நூல்களும் பிறவுமாம் எட்டுத்தொகையின் வைப்புமுறை ஒரு சிறந்த குறிக்கோளுடன் அமைக்கப்பெற்றதென அதன் காப்புத் திருப்பாட்டை வைத்து ஒருபுடையாகவுணரலாம். அது “மாயோன் மேய காடுறை யுலகமும்,” என்னும் தொல்காப்பியத்தைப் பின்பற்றியதாகும்.
அவற்றுள் ‘பதிற்றுப்பத்து’ நான்காம் எண்முறைக்கண் அமையப்பெற்றது. முதன் மூன்றும் அகப்பொருளையும் இது புறப்பொருளையும் உணர்த்துவன. இவற்றின் குறிப்பு அகப்பொருள் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை எனும் பாகுபாடெனலாம்.
பதிற்றுப்பத்து புறப்பொருளை யுணர்த்துவதுமட்டுமன்றிப் பண்டைச் சேரமன்னர் வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுத்துணரப் பெரும்பான்மையும் துணைசெய்யும் சிறந்த கருவி நூலாகும். இந்நூற்குப் பழைய உரையொன்றுள்ளது. அது புலவர்களுக்கு மட்டும் விளங்கும் தன்மையது.
இந்நூற்குச் சொற்பொருள், கருத்து விளக்கம், இலக்கணக் குறிப்பு, ஒப்பு முதலிய இன்றியமையா வுறுப்புக்கள் பலவமைந்த அகலவுரையொன்று இல்லாதிருந்தமை பெருங்குறை. அக்குறை அகன்று கற்பார்க்கு எழுச்சியும் இன்பமும் தருமாறு ஓர் உரை இயற்றித்தர, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சி விரிவுரையாளர் சித்தாந்த கலாநிதி, வித்துவான் திரு. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்களைக் கேட்டுக்கொண்டோம் அவர்களும் எங்கள் வேண்டுகோளுக் கிணங்கி, அவ்வண்ணமே இயற்றித் தந்தனர்.
இவர்கள் சங்கத் தண்டமிழ் நூல்களில் தோய்ந்து உண்மைப் பொருள் கண்ட ஒண்மையர். ‘புறநானூறு’ முதலியவற்றிற்குச் சிறந்த உரை இயற்றியுள்ளார்கள். இவ்வுரை எளிமை, இனிமை, திட்ப நுட்பம், தெளிவு விளக்கம் முதலிய உரைப் பண்புகளாற் சிறந்துள்ளது. உரையாசிரியர் அவர்கட்கு எங்கள் நன்றி உரித்தாகுக.
நூலைப் பற்றியும் உரையாசிரியர் உரைநயம் முதலியவற்றைப் பற்றியும் தக்கவாறாய்ந்து பன்மொழிப் புலவர், திரு தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை ஓர் அணிந்துரையை ஆங்கிலத்தில் உதவியுள்ளார்கள் இவ் வுரைநலத்தைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர், திரு க. வெள்ளைவாரணனார் அவர்களும், பதிற்றுப்பத்தின் பதிகங்களின் கருத்து விளங்க அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி விரிவுரையாளர், திரு தி. வி. சதாசிவப் பண்டாரத்தாரவர்களும் சிறந்த ஆய்வுரைகள் எழுதி உதவியுள்ளார்கள். இம் மூவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
இந்நூலைப் பழந்தமிழுண்மை கண்டுவக்கும் பெருமக்களும் மாணாக்கரும் ஆசிரியர்களும் வாங்கிப் பயன்பெறுவார்களாக.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்