தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இரு நிலம் துளங்காமை

இரு நிலம் துளங்காமை
9. செவ்வேள்


முருகவேளை வாழ்த்துதல்

இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
5
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
10
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று,
தணி மழை தலையின்று, தண் பரங்குன்று.


தமிழது சிறப்பிற்குக் காரணம்

நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது:
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
15
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி:
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
20
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே;
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;
சுணங்கறைப் பயனும் ஊடல் உள்ளதுவே.
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
25
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார், இக் குன்று பயன்.


வள்ளியும் முருகனும் சிறந்தவாறு

ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
30
'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும்
கேழ் இலார் மாண் நலம் உண்கோ, திரு உடையார்
மென் தோள்மேல் அல்கி நல்கலும் இன்று?
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!'
35
கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின்
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை,
'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாக
40
இறுகிறுக யாத்துப் புடைப்ப;
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.


வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகலுதல்

45
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்;
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள:
50
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்;
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;
தேர் அணி மணி கயிறு தெரிபு வருவார்;
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்;
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்;
55
தோள் வளை ஆழி சுழற்றுவார்
மென் சீர் மயில் இயலவர்.
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
60
மட மொழியவர் உடன் சுற்றி,
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
அறை அணிந்த அருஞ் சுனையான்
நறவு உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;
65
கோகுலமாய்க் கூவுநரும்,
ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண் பரங்குன்று.


வாழ்த்தி வேண்டல்

70
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்
அடும் போராள! நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
75
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய்,
செம்மைப் புதுப் புனல்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
மேஎ எஃகினவை;
80
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை;
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர!
வாழ்த்தினேம், பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
85
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே.


கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பலையாழ்

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:27:58(இந்திய நேரம்)