தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கடல் குறைபடுத்த நீர்

கடல் குறைபடுத்த நீர்
20. வையை


புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்

கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
5
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று.
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
10
கான் ஆற்றும் கார் நாற்றம்,கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.


புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வகை

தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று
வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று: உயர் மதிலில்
15
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ,
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,
வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,
கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
20
மகளிர் கோதை மைந்தர் புனையவும்,
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,
25
மாட மறுகின் மருவி மறுகுற,
கூடல் விழையும் தகைத்து தகை வையை.


தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து நேர்ந்த நிகழ்ச்சி

புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,
தகை வகை தைஇயினார் தார்;
வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்
30
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்
அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,
35
நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க,


தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதலும்

தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;
செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன
நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.


தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்

40
என ஆங்கு,
ஒய்யப் போவாளை, 'உறழ்ந்தோள் இவ் வாணுதல்'
வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,
'செறி நிரைப் பெண்' வல் உறழ்பு 'யாது தொடர்பு?' என்ன
45
மறலினாள், மாற்றாள் மகள்.


தலைமகளின் திகைப்பு

வாய் வாளா நின்றாள்,
செறிநகை சித்தம் திகைத்து.


ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்

ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!
50
பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத்
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,
காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,
மூரி தவிர முடுக்கு முது சாடி!
55
மட மதர் உண்கண் கயிறாக வைத்துத்
தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்
தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்
60
வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து,
மத்திகை மாலையா மோதி, அவையத்துத்
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம்.
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
65
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்


பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று

தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு
ஊடினார், வையையகத்து.
'சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க;
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை
70
வந்திக்க வார்' என


பரத்தையின் பதில் உரை

'மனத் தக்க நோய் இது;
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,
மாற்றாளை மாற்றாள் வரவு.'


தலைவி கூற்று

75
'அ...சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு.'


பரத்தையின் மறுமொழி

80
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்
கால சிலம்பும் கழற்றுவான்; சால,
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.'
என ஆங்கு


கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல்

85
வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே.


தலைமகளுக்கு முனிவு நீங்க உரைத்தல்

சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
90
இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;
நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்!
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம்; என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல்!
95
கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!'


வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின் சுருங்கை வழியே பாயும் காட்சி

என ஆங்கு
இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும்,
தென்னவன் வையைச் சிறப்பு.
கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,
100
அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,
குடை விரிந்தவை போலக் கோலும் மலர்,
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,
சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,
அருவி சொரிந்த திரையின் துரந்து;
105
நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து
கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும்
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது.


பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு

நாம் அமர் ஊடலும் நட்பும், தணப்பும்,
110
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,
தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்
பூ மலி வையைக்கு இயல்பு.


பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப் பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

 

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:28:45(இந்திய நேரம்)