தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நிறை கடல் முகந்து உராய்

நிறை கடல் முகந்து உராய்
6. வையை


வையையில் பெருவெள்ளம்

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
5
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பயவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
10
தாயிற்றே தண் அம் புனல்.


புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்

புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும், வையை வரவு.


வையையின் கரை உடைதலும், ஊரார் கிளர்ந்து எழுதலும்

தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க,
15
கொடி சேரா, திருக் கோவை காழ் கொள,
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
20
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
வரைச் சிறை உடைத்ததை வையை: 'வையைத்
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக' எனும்
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று.


மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்

25
அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென,
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல;
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
30
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்
அணிஅணி ஆகிய தாரர், கருவியர்,
அடு புனலது செல அவற்றை இழிவர்:
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
35
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ,


ஆற்றினது நீரோட்டம்

சேரி இளையர் செல அரு நிலையர்,
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
40
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும், யாறு வரலாறு.


அந்தணர்கள் கொண்ட கலக்கம்

நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து,
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,
45
புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு.


பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்

மாறு மென் மலரும், தாரும் கோதையும்,
வேரும் தூரும், காயும் கிழங்கும்,
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப, 'நலன் அழிந்து,
50
வேறாகின்று இவ் விரி புனல் வரவு' என,
சேறு ஆடு புனலது செலவு.
வரை அழி வால் அருவி வாதாலாட்ட,
கரை அழி வால் அருவி கால் பாராட்ட,
'இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
55
புரைவது பூந் தாரான் குன்று' எனக் கூடார்க்கு
உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடி,
சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்
தான் மலர்ந்தன்றே,
60
தமிழ் வையைத் தண்ணம் புனல்.


இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்

'விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்.'
'தளிர் அறிந்தாய், தாம் இவை.'


களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்

'பணிபு ஒசி பண்ப! பண்டெல்லாம் நனி உருவத்து;
என்னோ துவள் கண்டீ?
65
எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக்
கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
செய்ததும் வாயாளோ? செப்பு.'


தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என

'புனை புணை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
70
பெருக்கு அன்றோ, வையை வரவு?'


தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து உரைத்தல்

'ஆம்ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல்! வையைப்
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
75
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,
குருகு இரை தேரக் கிடக்கும் பொழி காரில்,
இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்
வையை வயமாக வை.
செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,
80
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை;
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்
அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,
85
பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்
கனற்றுபு காத்தி, வரவு!'


தலைமகன் மேலும் கூறுதல்

'நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்
அல்லா விழுந்தானை எய்தி, எழுந்து ஏற்று யான்
90
கொள்ளா அளவை, எழும் தேற்றாள்: கோதையின்
உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது? என


காதற் பரத்தை கூற்று

தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்
யாறு உண்டோ? இவ் வையை யாறு.


தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை

'இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்
95
தலை தொட்டேன், தண் பரங்குன்று!'


விறலிக்குத் தலைமகள் கூறுதல்

'சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே
100
வல் இருள் நீயல்; அது பிழையாகும்' என,
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து,
வல்லவர் ஊடல், உணர்த்தர, நல்லாய்!
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
105
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
வாடற்க, வையை! நினக்கு.


'வையை நீர் விழவணியில் காதற்பரத்தை, "இற்பரத்தையுடன் நீராடினான் தலைமகன்' எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்' எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ் வையை நீர் விழவணியும், ஆங்குப் பட்ட செய்தியும் கூறி, வாயில் மறுத்தது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:30:13(இந்திய நேரம்)