தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


புதுநீர் ஆடற்கு மதுரைமாந்தர் விருப்பத்தொடு விரைந்து குழுமிச் செல்லுதற்கு வழிபெறாராய் மெல்ல மெல்லச் செல்லுந் தோற்றத்திற்கு,

"அதிர்குரல் வித்தகர் ஆக்கிய தாள
விதி கூட்டிய இய மென்னடை போலப்
பதி எதிர் சென்று."

என, இன்னிசையின் மூவகைத்தாள நடையினுள் மென்னடையை நுண்ணிதின் உவமையாக எடுத்துக் கூறுதலும்; மற்றோரிடத்தே, நீலமேகவண்ணப் பெருமானாகிய திருமால் ஒருபக்கத்தே ஒளிமிக்க ஆழிப்படையினையும், மற்றொரு பக்கத்தே சங்கினையும் உடையனாய் நின்றருளும் திருக்கோலத்திற்கு, நெடிய முகில் ஒன்று தன்னிரு பக்கத்திலும் ஞாயிறுந் திங்களும் நின்று விளங்க நிற்றலை உவமையாக எடுத்து,

"மால்
பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த இருவேறு
மண்டிலத்து இலக்கம் போல நேமியும் வளையும் ஏந்தி"

எனக் கூறுதலும், மற்றோரிடத்தே,

திருமாலிருங்குன்றத்தில் பொன்னாடை பூண்டு நிற்கும் திருமாலை, இருட் பிழம்பொன்று இளவெயில் தன்னைச் சூழ்ந்து சுற்ற வளர்ந்து நின்றாற்போன்று நின்றான், எனவும்,

நிறத்தாலே மாறுபட்டு உருவத்தாலே இருவராய்த் தொழிலாலே ஒன்றுபட்ட கண்ணபெருமானுக்கும், பலதேவனுக்கும் உவமையாக,

"கல்லறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவேறு உருவின் ஒருதொழில் இருவர்"

என ஓதுதலும்,

இனி, ஒருத்தி வெள்ளியாலாய வள்ளத்தை (கிண்ணத்தை) உறையினின்றும் எடுத்தாளாக, அத்தோற்றம் முகிலினூடிருந்து வெளிவரும் முழுத்திங்களை ஒத்தது என்றும், அவ் வெள்ளி வள்ளத்தை அம் மடந்தை விரல்களாலே பற்றியிருந்ததற்குப் பாம்பாலே பற்றப்பட்ட திங்களை உவமை கூறுதலும், மேலும் அம் மடந்தை அவ் வள்ளத்திலே நறவினைப்பெய்து தனது மலர் வாயின் வைத்துப் பருகினாளாக, அவள் முழுத்திங்களின் கலையினை வாய்மடுத்துண்ணும் ஒரு தெய்வமகளை ஒத்துத் தோன்றினாள்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:57:27(இந்திய நேரம்)