Primary tabs
எனவரும்.உள்ளீ டாகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி யீட்டம் கழிப்பிய வழிமுறை"
மிகமிகப் பழங்காலத்திலேயே இப் பேருண்மையை நம் முன்னோர் எப்படித்தான் உணர்ந்துகொள்ள முடிந்ததோ! என்று யாம் வியக்காமலிருத்தல் இயலாது.
காட்சிப்பொருளா மிவ்வுலகப் பொருளனைத்தும் கண் காணப்படாததொரு பரவெளியினின்றும் நமக்கு நன்கொடையாக வந்தவையே என்னுமிது, எத்துணை வியத்தகு கருத்தாகும். சிவானுபூதிச் செல்வராகிய தாயுமான அடிகளார் இக் கருத்தினையே,
என்றும்,"வடிவனைத்துந் தந்த வடிவில்லாச் சுத்த
வான் பொருள்"
"பெருவெளியாய் ஐம்பூதம் பிறப்பிடமாய்ப்
பேசாத பெரியமோனம், வருமிடம்"
என்றும் அழகுற விளம்புவர்.
இனி, 6 ஆம் பாடலின்கண் நாடக வழக்கத்தானே கூறப்படும் ஒரு தலைவனுக்கும் காதற் பரத்தைக்கு மிடையே நிகழும் உரையாடல் மிகவும் இனியதாம்:
தமிழ் வையையில், தண்ணம் புனல் வெள்ளமாகப் பெருகிற்று; ஒரு தலைவன் தன் காதற் பரத்தைக்குக் கையுறையாக இனிய தளிர் பலவற்றைக் கொய்துகொண்டு அவள் தயவினைப் பெறுதற்கு அவள்பால் வருகின்றான்; 'குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்' என்றபடி முகமழுங்கிவரும் அவனை ஏற்றுக் கொள்ளாமல் அப் பரத்தை அவனைச் சீறுகின்றாள்.
"ஏடா! இத் தழையைப் பார்! இவை எவ்வளவு துவண்டு கிடக்கின்றன; இவை என்பொருட்டு நீ கொய்தவையல்ல; வேறு மகளிர்க்குக் கொடுக்கவே கொய்தனை; அவர் நின்னை ஏற்க மறுத்தனர்; அதனால் இவற்றை இப்பொழுது என்பால் கொணர்ந்தனை; ஐயோ பாவம்! நீ இதனை வினைகெட்டுக் கொய்த அருமையைத் தானும் அவர் கருதிற்றிலர் போலும்!" என்றாள்.