தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


8. நப்பண்ணனார்

செவ்வேள் மேலதாகிய 19 ஆம் பாடல் இவரால்
இயற்றப்பட்டது. இவராலே கூறப்படும் இனிய செய்திகள் பல இம்
முன்னுரையிலேயே முன்னும் எடுத்துக்காட்டப்பட்டன.

9. நல்லச்சுதனார்

இவர் செவ்வேட்குரிய 21 ஆம் பாடலை இயற்றியவர் ஆவர்.
இவர், இப் பரிபாடலின்கண் 16, 17, 18, 20 ஆகிய பாடல்களுக்கு
இசைவகுத்தவருமாவார். ஆகவே, இவரும் இயலினும் இசையினும்
புலமை வாய்ந்தவர் என்று தெரிகின்றது. மேலும், இவர் கூத்தியற்
கலையினும் வல்லவர் என்பது (21) இப் பாடலில் 19 ஆம்
அடிதொடங்கி 29 ஆம் அடி முடியவும், 54 ஆம் அடி தொடங்கி 65
ஆம் அடி முடியவும் கூறும் கூத்துச் செய்திகளான் அறியலாம்.

10. நல்லழிசியார்

இவர், வையையைப்பற்றிய 16 ஆம் பாடலையும் செவ்வேட்குரிய
18 ஆம் பாடலையும் இயற்றியவராவார்.

11. நல்லெழினியார்

இவர் 13 ஆம் பாடலை இயற்றியவராவர். இவர், தத்துவ நூலில்
வல்லவர் என்பது இவர் பாடலால் உணரப்படும். இவர், திருமாலை
வண்ணித்திருக்கும் பகுதி சிறப்புடையது.

12. நல்வழுதியார்

இவர், வையைபற்றிய 12 ஆம் பாடலை இயற்றியவர்.
இவர், வையையின்கண் புதுநீர் பெருகிவரும் காட்சி கற்போர்க்குக்
கண்கூடாப் புலப்படும்படி ஓதியுள்ளார். இவர் இசைச் செய்திகளையும்
நீராடுவோருள் நிகழும் சுவைமிக்க சொல்லாட்டங்களையும், தன்
கணவனை மற்றொருத்தி பார்த்ததன் பொருட்டு அவனோடு பிணங்கும்
பேதையின் சொல்லையும், பிழையிலாத அத் தலைவன் அவளைத்
தொழுது 'என் பிழைப்பறியேன் இயம்புக!" என்று நயத்தலும்,
இன்னோரன்ன பிறவும் இன்பம் கெழும இயம்பியுள்ளார். வழுதி
என்னுமிவர் பெயர் இவர் பாண்டியர் பழங்குடித் தோன்றல் என்பதனை
உணர்த்தும்!

13. மையோடக்கோவனார்

இவர், வையைக்குரிய 7 ஆம் பாடலை யாத்தவர். இவர்
மகளிரின் நீர்விளையாடலை மாண்புற விளக்கியுள்ளார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:07:13(இந்திய நேரம்)