தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அம்மூவனார்

அம்மூவனார்
10. நெய்தல்
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
5
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
140. நெய்தல்
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
5
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
10
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
15
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்
280. நெய்தல்
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
5
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
10
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார்
370. நெய்தல்
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ,
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று;
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
பகலே எம்மொடு ஆடி, இரவே,
5
காயல் வேய்ந்த தேயா நல் இல்
நோயொடு வைகுதிஆயின், நுந்தை
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே,
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல்
10
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல்
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி,
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு,
நீயே கானல் ஒழிய, யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து,
15
ஆடு மகள் போலப் பெயர்தல்
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே!
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார்
390. நெய்தல்
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
5
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும்,
10
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின்
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என,
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என,
15
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - அம்மூவனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:38:51(இந்திய நேரம்)