தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆட்டன் அத்தி

ஆட்டன் அத்தி
222. குறிஞ்சி
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக்
கான நாடன் உறீஇய நோய்க்கு, என்
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்;
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்,
5
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும்,
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்,
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ,
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின்,
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த
10
ஆதிமந்தி காதலற் காட்டி,
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்,
சென்மோ வாழி, தோழி! பல் நாள்,
உரவு உரும் ஏறொடு மயங்கி,
15
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர்
236. மருதம்
மணி மருள் மலர முள்ளி அமன்ற,
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி,
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
5
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப்
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக்
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன், நன்றும்
10
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல்
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப,
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின்,
15
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை,
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என,
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
20
ஆதிமந்தி போல,
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர்
376. மருதம்
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன்
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
5
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
10
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
15
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர்
396. மருதம்
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
5
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
10
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின்
15
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:24:01(இந்திய நேரம்)