தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோதை

கோதை

 

93. பாலை
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
5
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
10
நாள் அங்காடி நாறும் நறு நுதல்
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
15
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
20
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.
வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார்

 

263. பாலை
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
5
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
10
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ!
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
15
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:33:19(இந்திய நேரம்)