தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செல்லிக் கோமான்

செல்லிக் கோமான்

 

216. மருதம்
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
5
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
10
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
15
பெருங் களிற்று எவ்வம் போல,
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:33:51(இந்திய நேரம்)