தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நந்தர்

நந்தர்

 

265. பாலை
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்கொல்லோ?
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
5
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து,
10
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து,
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து,
அணங்கு அரு மரபின் பேஎய் போல
15
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க,
துகள் அற விளைந்த தோப்பி பருகி,
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு
20
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:40:10(இந்திய நேரம்)