தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உழையர்

 

324. முல்லை
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
5
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில்
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சால,
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய,
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய்,
10
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
செல்லும், நெடுந்தகை தேரே
15
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார்

 

354. முல்லை
மத வலி யானை மறலிய பாசறை,
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
5
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து,
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
10
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்

 

384. முல்லை
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
5
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில்,
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
10
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
உரைமதி வாழியோ, வலவ!' என, தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:22:15(இந்திய நேரம்)