தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலமலர் அன்ன

இலமலர் அன்ன

 

142. குறிஞ்சி
இலமலர் அன்ன அம் செந் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
5
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி,
10
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
15
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
20
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப,
25
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்;
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:34:09(இந்திய நேரம்)