தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உயிர் கலந்து ஒன்றிய

உயிர் கலந்து ஒன்றிய

 

205. பாலை
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல,
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
5
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
10
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி,
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல
15
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி,
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
20
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:36:06(இந்திய நேரம்)