தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குருந்தம்
85. பாலை
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
5
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
10
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
15
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
5
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
10
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
15
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
194. முல்லை
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
5
வித்திய மருங்கின் விதை பல நாறி,
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
10
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
15
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக்
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
விரிஉளை, நல் மான் கடைஇ
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே.
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார்
304. முல்லை
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
5
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
10
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
15
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
20
நம் நோய் தன்வயின் அறியாள்,
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:47:50(இந்திய நேரம்)