தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சந்தனம் (சாந்தம்)
2. குறிஞ்சி
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
242. குறிஞ்சி
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை,
5
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம்,
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ,
10
அறியா வேலற் தரீஇ, அன்னை
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி,
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம்,
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள்,
15
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய,
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ்
முயங்கல் இயைவதுமன்னோ தோழி!
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச்
20
சாந்த மென் சினை தீண்டி, மேலது
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே!
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார்
282. குறிஞ்சி
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
செறி மடை அம்பின், வல் வில், கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு,
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்,
5
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப,
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு,
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார்
10
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி,
15
யாயும், 'அவனே' என்னும்; யாமும்,
'வல்லே வருக, வரைந்த நாள்!' என,
நல் இறை மெல் விரல் கூப்பி,
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே!
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன்
354. முல்லை
மத வலி யானை மறலிய பாசறை,
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
5
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து,
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
10
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:49:16(இந்திய நேரம்)