தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோரை(பைஞ்சாய்)
62. குறிஞ்சி
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
5
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
10
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல,
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே வென் வேற்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
15
கடவுள் எழுதிய பாவையின்,
மடவது மாண்ட மாஅயோளே.
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
226. மருதம்
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
நாண் இலை மன்ற யாணர் ஊர!
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
5
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
10
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
15
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:12:55(இந்திய நேரம்)