தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அதிரல்
157. பாலை
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,
5
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின்
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
10
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி!
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
வினை அழி பாவையின் உலறி,
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார்
237.பாலை
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப,
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ,
5
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து
இன்னா கழியும் கங்குல்' என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை
10
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு,
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு,
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும்,
15
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார்
289. பாலை
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
5
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
10
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப,
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
15
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,
'நல்ல கூறு' என நடுங்கி,
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
391. பாலை
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர்
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர்
5
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி,
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
பழ அணி உள்ளப்படுமால் தோழி!
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி
10
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை
குன்று புகு பாம்பின் தோன்றும்,
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே!
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:15:13(இந்திய நேரம்)