தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வயலை
97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
5
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
10
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
15
ஆழல்' என்றி தோழி! யாழ என்
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
20
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
176. மருதம்
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
5
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
10
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
15
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
20
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
25
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம்- பாடிய இளங்கடுங்கோ
189. பாலை
பசும் பழப் பலவின் கானம் வெம்பி,
விசும்பு கண் அழிய, வேனில் நீடி,
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு
5
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி,
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென,
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற,
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
10
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
15
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே.
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
259. பாலை
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக்
5
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர்
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன்
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும்,
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்,
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
10
போது வந்தன்று, தூதே; நீயும்
கலங்கா மனத்தை ஆகி, என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி!
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்,
15
நின்னினும் மடவள் நனி நின் நயந்த
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி,
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே!
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார்
275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
5
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
10
ஏதிலாளன் காதல் நம்பி,
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
15
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
383. பாலை
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
காடும் கானமும் அவனொடு துணிந்து,
நாடும் தேயமும் நனி பல இறந்த
5
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என,
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
10
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு,
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:18:58(இந்திய நேரம்)