தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலவம்பூ
133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
5
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
10
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
15
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
142. குறிஞ்சி
இலமலர் அன்ன அம் செந் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
5
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி,
10
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
15
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
20
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப,
25
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்;
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
245. பாலை
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
5
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
10
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்
கான யானை வெண் கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
15
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
20
அம் மா அரிவை ஒழிய,
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:22:13(இந்திய நேரம்)