தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புன்னை
10. நெய்தல்
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
5
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
126. மருதம்
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
5
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
10
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
15
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
20
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
145. பாலை
வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
5
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
10
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
15
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
20
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
170. நெய்தல்
கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
5
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
10
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
230. நெய்தல்
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப்
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல்,
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று,
5
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்!
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு,
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம்,
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின்,
10
தீதும் உண்டோ, மாதராய்?' என,
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர்
கை வல் பாகன் பையென இயக்க,
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில்
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி,
15
சிறிய இறைஞ்சினள், தலையே
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
240. நெய்தல்
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்
5
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
10
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி,
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து,
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்,
பூ வேய் புன்னை அம் தண் பொழில்,
15
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே.
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார்
250. நெய்தல்
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,
5
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட,
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு
10
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய்,
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது, கங்குலானே!
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
260. நெய்தல்
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர,
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப,
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப,
5
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய,
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர,
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப்
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ,
10
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற,
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது,
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள்
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள்,
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த
15
அன்பிலாளன் அறிவு நயந்தேனே.
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார்
310. நெய்தல்
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,
5
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,
10
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப!
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
15
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து
உரும் இசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.
தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார்
360. நெய்தல்
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி,
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித்
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
5
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப,
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
வந்த மாலை பெயரின், மற்று இவள்
10
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால்,
பாணி பிழையா மாண் வினைக் கலி மா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி,
15
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என
நல் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:34:56(இந்திய நேரம்)