தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முருங்கை
1. பாலை
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
5
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
10
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
15
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்
53. பாலை
அறியாய், வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
5
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
10
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
15
பொருளே காதலர் காதல்;
'அருளே காதலர்' என்றி, நீயே.
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்
101. பாலை
அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
5
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
10
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
15
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:37:09(இந்திய நேரம்)