தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வரகு
194. முல்லை
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
5
வித்திய மருங்கின் விதை பல நாறி,
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
10
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
15
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக்
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
விரிஉளை, நல் மான் கடைஇ
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே.
பருவம் கண்டு ஆற்றாமை மீதூர, தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார்
359. பாலை
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
5
எவன் கையற்றனை? இகுளை! அவரே
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
10
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
15
அருவித் துவலையொடு மயங்கும்
பெரு வரை அத்தம் இயங்கியோரே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்
367. பாலை
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
5
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்,
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
10
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின்,
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
15
உயிர் குழைப்பன்ன சாயல்,
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர்
384. முல்லை
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
5
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில்,
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
10
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
உரைமதி வாழியோ, வலவ!' என, தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார்
393. பாலை
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக்
5
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
10
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
15
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
20
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
25
வேனில் அதிரல் வேய்ந்த நின்
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:46:30(இந்திய நேரம்)