தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாழை
2. குறிஞ்சி
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:51:16(இந்திய நேரம்)