தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அணில்(வெளில்)
12. குறிஞ்சி
யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
5
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை,
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
10
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
நல் வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர்
109. பாலை
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
5
காடு கால்யாத்த நீடு மரச் சோலை
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை,
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென,
10
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
15
வறன் உறு குன்றம் பல விலங்கினவே.
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:52:22(இந்திய நேரம்)