தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agananooru


மணிமிடை பவளம்

பதிப்புரை

அகத்தே நிகழும் இன்பம் ‘அகப்பொருள்’ எனப்படும். அகப்பொருள் நூல்கள் தமிழில் பல உள்ளன. ஆயினும், ‘அகம்’ என்றே பெயரமைந்த பழைய இலக்கிய நூல் இப்போது ஒன்றே உள்ளது. அது தான் ‘அகநானூறு’ என்பது.

கடைச் சங்க காலத்தில் எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்று. நானூறு அகவற் பாட்டுக்களால் ஆனது; புலவர் பலரால் இயற்றப்பட்டு, மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மரால் தொகுக்கப்பட்டது.

அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் நூற்றிருபது பாட்டுக்கள் ‘களிற்றியானை நிரை’ எனப்படும். அடுத்த நூற்றெண்பது பாட்டுக்கள் ‘மணிமிடைபவளம்’ எனப்படும். கடைசி நூறு பாட்டுக்கள் ‘நித்திலக்கோவை’ எனப்படும்.

இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது, முதல் 90 பாட்டுகட்கு மட்டும் குறிப்புரையாக இருக்கின்றது. அடுத்த 70 பாட்டுகட்கு அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியரான திரு. வே. இராசகோபாலாசாரியார் உரை எழுதியிருக்கிறார். ஆதலால் நூல் முழுமைக்கும் ஒரே வகையாகத் தெள்ளிய உரையொன்று எழுதி வெளிவரவேண்டிய இன்றியமையாமை இந் நூலுக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது.

அக்குறையினை நீக்கும்பொருட்டு, தஞ்சை நாவலர், திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும், கரந்தைக்கவியரசு, ஆர் வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து இப்போது இந் நூல் முழுமைக்கும் உரை யெழுதியிருக்கின்றனர்.

செய்யுட்களைப் பதம் பிரித்து, முதலில் தெளிவாகத் தலைப்புக் கொடுத்துப் பின்பு பொருள் செல்லும் நெறிக்கு ஏற்ப முறைப்படுத்திப் பதவுரை கண்டு, அதன்மேல் முடிபும் விளக்கவுரையும் எழுதி, உள்ளுறை புலப்படுத்தி, மேற்கோள் இடங்களை விளக்கி, உரிய அடிக் குறிப்புக்களுடன் இவ்வுரை தெளிந்து செல்கின்றது.

முதற்கண் ‘களிற்றியானை நிரை’ என்னும் முதற்பகுதி ஒரு தனிப் புத்தகமாக வெளியிடப்பெற்றது. இப்போது, இரண்டாம் பகுதியாகிய ‘மணிமிடை பவளமும்’ ஒரு தனிப் புத்தகமாக வெளியிடப் பெறுகின்றது இறுதியிற் பாட்டு முதற் குறிப்பும், ஆசிரியர் பெயர் வரிசையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அகநானூறு முழுப் புத்தகமாக வெளிவரும்போது நூல் வரலாறு, உரை வரலாறு, அரும்பொருட் குறிப்பு முதலிய பிற குறிப்புக்களும் சேர்க்கப்பெறும். 

மு. காசிவிசுவநாதன்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 20:17:18(இந்திய நேரம்)