தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அண்டிரன்

அண்டிரன்
129
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
5
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

131
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடினகொல்லோ
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

240
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு,
5
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ,
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை,
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி,
10
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியராகி, பிறர்
நாடு படு செலவினர் ஆயினர், இனியே.
திணையும் துறையும் அவை.
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.

241
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசம் கறங்க,
5
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே.
திணையும் துறையும் அவை.
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

374
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத்
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
5
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என்
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர,
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட,
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்
10
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை,
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்,
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும்,
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ,
15
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன்,
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன் விளங்குதியால் விசும்பினானே!
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:45:02(இந்திய நேரம்)