தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குமணன்

குமணன்
158
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
5
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;
10
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர,
15
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்
20
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
25
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!
இசை மேந்தோன்றிய வண்மையொடு,
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

159
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின்,
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து,
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி,
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று,
5
முன்றில் போகா முதிர்வினள் யாயும்;
பசந்த மேனியொடு படர் அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள்
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
10
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று,
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று,
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா,
துவ்வாளாகிய என் வெய்யோளும்;
15
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை,
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
20
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என்,
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதிஆயின், சிறிது
25
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்
வசை இல் விழுத் திணைப் பிறந்த
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே.
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனை அவர் பாடியது.

160
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப, கல்லென
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு,
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென,
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில்,
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ,
10
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என,
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி,
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன்,
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே;
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என,
15
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று,
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும்
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்,
20
கூழும் சோறும் கடைஇ, ஊழின்
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு,
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும்,
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி,
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும்
25
வினவல் ஆனாளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப,
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை
நீர் சூழ் நிலவரை உயர, நின்
30
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

161
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு,
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ,
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு,
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து,
5
வள மழை மாறிய என்றூழ்க் காலை,
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக்
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின்,
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர,
10
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று,
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு,
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக்
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து,
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின்
15
தாள் படு செல்வம் காண்தொறும் மருள,
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு,
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில்
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,
20
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்!
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி!
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே,
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த
25
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப்
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல,
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின்
30
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப,
வாள் அமர் உழந்த நின் தானையும்,
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே.
திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.

162
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
5
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.
திணை அது; துறை பரிசில் விடை.
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,

163
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
5
இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே.
திணை அது; துறை பரிசில்
பெருஞ் சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.

164
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை
5
சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி,
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத்
10
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்,
மண் அமை முழவின், வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

165
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே;
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்,
5
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல்,
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப்
பாடி நின்றனெனாக, 'கொன்னே
10
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என,
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய,
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்;
ஆடு மலி உவகையொடு வருவல்,
15
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே.
திணை அது; துறை பரிசில் விடை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:57:37(இந்திய நேரம்)