தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்த ரஞ்சேரல் இரும்பொறை

கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்த ரஞ்சேரல் இரும்பொறை
229
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்,
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய,
5
பங்குனி உயர் அழுவத்து,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,
தொல் நாள்மீன் துறை படிய,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
10
அளக்கர்த் திணை விளக்காகக்
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்
15
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,
20
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ
25
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை,
மணி வரை அன்ன மாஅயோனே?
திணையும் துறையும் அவை.
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:58:09(இந்திய நேரம்)