தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
50
மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
5
குருதி வேட்கை உரு கெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
10
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
15
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?
திணை அது; துறை இயன்மொழி.
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:02:11(இந்திய நேரம்)