தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாஞ்சில் வள்ளுவன்

நாஞ்சில் வள்ளுவன்
137
இரங்கு முரசின், இனம்சால் யானை,
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே;
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய
5
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது,
கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்,
கண் அன்ன மலர் பூக்குந்து,
கருங் கால் வேங்கை மலரின், நாளும்
10
பொன் அன்ன வீ சுமந்து,
மணி அன்ன நீர் கடல் படரும்;
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை!
நீ வாழியர்! நின் தந்தை
15
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!
திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.

138
ஆனினம் கலித்த அதர் பல கடந்து,
மானினம் கலித்த மலை பின் ஒழிய,
மீனினம் கலித்த துறை பல நீந்தி,
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ்,
5
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை,
'மாறி வா' என மொழியலன் மாதோ;
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
10
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின்,
நின்னை வருதல் அறிந்தனர் யாரே?
திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

139
சுவல் அழுந்தப் பல காய
சில் ஓதிப் பல் இளைஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே,
5
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி,
10
கனி பதம் பார்க்கும் காலை அன்றே;
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள்,
அருஞ் சமம் வருகுவதுஆயின்,
15
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே.
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
அவனை அவர் பாடியது.

140
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்!
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறைஆக யாம் சில
5
அரிசி வேண்டினேமாக, தான் பிற
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி,
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
10
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?
திணை அது; துறை பரிசில் விடை.
அவனை ஒளவையார் பாடியது.

380
தென் பவ்வத்து முத்துப் பூண்டு,
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ,
........................................ங் கடல் தானை,
இன் இசைய விறல் வென்றி,
5
தென்னவர் வய மறவன்;
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து,
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய,
வேறுபெ.....................................................த்துந்து,
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்;
10
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்;
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்;
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல,
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்;
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம்
15
இலம்படு காலை ஆயினும்,
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே.
திணை அது; துறை இயன்மொழி.
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:14:06(இந்திய நேரம்)