தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வல்வில் வேட்டுவன்

வல்வில் வேட்டுவன்
150
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி,
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி,
5
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்,
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி,
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை,
10
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத்
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
15
நல் மரன் நளிய நறுந் தண் சாரல்,
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே,
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என,
20
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்;
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்;
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்;
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே
25
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின்,
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர்,
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:27:08(இந்திய நேரம்)