தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புலவராற்றுப்படை

புலவராற்றுப்படை
48
கோதை மார்பின் கோதையானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்,
மாக் கழி மலர்ந்த நெய்தலானும்,
கள் நாறும்மே, கானலம் தொண்டி;
5
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்;
அன்னோற் படர்தியாயின், நீயும்
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல!
'அமர் மேம்படூஉம் காலை, நின்
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே.
திணை பாடாண் திணை; துறை புலவராற்றுப் படை.
சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.

49
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
5
இறங்கு கதிர் அலமரு கழனியும்,
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே!
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
அவனை அவர் பாடியது.

141
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க,
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
5
யாரீரோ?' என, வினவல் ஆனா,
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
10
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்,
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலி மான் பேகன்,
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என,
மறுமை நோக்கின்றோ அன்றே,
15
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே.
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:27:28(இந்திய நேரம்)