தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உருமிசை முழக்கு என

உருமிசை முழக்கு என
373
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப,
செரு நவில் வேழம் கொண்மூ ஆக,
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக்
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை,
5
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப,
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை,
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!
................................................தண்ட மாப் பொறி.
10
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ
..........................அணியப் புரவி வாழ்க என,
15
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர,
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா,
........................................................ற் றொக்கான
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை,
20
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு,
உரும் எறி மலையின், இரு நிலம் சேர,
சென்றோன் மன்ற, சொª
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக,
25
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக்
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி;
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்!
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று,
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி,
30
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும்
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற,
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி,
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்,
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும!
35
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத்
தா இன்று உதவும் பண்பின், பேயொடு
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து
செஞ் செவி எருவை குழீஇ,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!
40
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:55:39(இந்திய நேரம்)