தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தென் குமரி வட பெருங்கல்

தென் குமரி வட பெருங்கல்
17
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா எல்லை,
குன்று, மலை, காடு, நாடு,
ஒன்று பட்டு வழிமொழிய,
5
கொடிது கடிந்து, கோல் திருத்தி,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
10
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைத் தீப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
15
நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்,
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடியாங்கு
20
நீ பட்ட அரு முன்பின்
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக்கூறலின்,
'உண்டாகிய உயர் மண்ணும்,
25
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும்,
'ஏந்து கொடி இறைப்புரிசை,
வீங்கு சிறை, வியல்அருப்பம்,
இழந்து வைகுதும், இனி நாம் இவன்
30
உடன்று நோக்கினன், பெரிது' எனவும்,
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழை என மருளும் பல் தோல், மலை எனத்
35
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை,
உடலுநர் உட்க வீங்கி, கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப,
இடி என முழங்கும் முரசின்,
40
வரையா ஈகைக் குடவர் கோவே!
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:35:20(இந்திய நேரம்)