தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீர் நுங்கின் கண் வலிப்ப

நீர் நுங்கின் கண் வலிப்ப
389
'நீர் நுங்கின் கண் வலிப்ப,
கான வேம்பின் காய் திரங்க,
கயம் களியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போருறு காலை,
5
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!'
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை;
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து,
10
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும்
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்!
ஆதனுங்கன் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட,
15
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும!
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே!
திணையும் துறையும் அவை.
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:42:45(இந்திய நேரம்)